Saturday, November 5, 2016

நல்லெண்ணையில் மரபு பணு மாற்று பருத்திக் கொட்டை எண்ணைய் கலப்பு: பிரபல கம்பெனிகளின் ஏமாற்று!

உண்மையில் இதைப் பற்றி களத்தில் இறங்கிப் போராடும் நண்பர்கள் விரிவாக எழுதினால்தான் சரியாக இருக்கும். ஆனாலும் நான் புரிந்து கொண்டதன்படி என்னால் இயன்றதை எழுதுகிறேன்..
இதயம் உட்பட பல நல்லெண்ணை கம்பெனிகள் தங்களது நல்லெண்ணை அற்புதமான இயற்கையான நல்லெண்ணை என்று விளம்பரப்படுத்தி வருகின்றன. நானே கூட ரிஃபைன்டு ஆயில்களின் பிடியிலிருந்து வெளி வருவதற்காக எங்க வீட்டில் ஒரு வருடம் வெறும் இதயம் நல்லெண்ணையிலேயே சமைக்கச் சொல்லி இருந்தேன்..
பின்னர் இயற்கை வேளாண்மைப் பொருட்களின் பக்கம் என் கவனம் திரும்பியபின் ஆர்கானிக் எண்ணைகளையே நான் வாங்கத் துவங்கினேன்.. அப்போதுதான் பல உண்மைகள் எனக்கு தெரியவந்தன.
பொதுவாக ஒரு லிட்டர் நல்லெண்ணை தயாரிக்க நான்கு கிலோ எள் தேவைப்படுகிறது. எள்ளின் விலை கிலோ 110 ரூபாய் என்று இருக்கிறது என்றால் இந்த பிராண்டட் நல்லெண்ணைகள் லிட்டர் 400 ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலைக்கு கிடைக்கும் மர்மத்தில்தான் இந்த கேள்விக்கான விடை இருக்கிறது..
நான்கு கிலோ எள்ளை 440 ரூபாய்க்கு வாங்கி ஆட்டி எண்ணை எடுத்து சுத்திகரித்து பேக்கிங் செய்து 400 ரூபாய்க்கு விற்க எந்த கம்பெனியும் நாட்டுப் பணி ஆற்ற வரவில்லை.. அப்புறம் எப்படி இந்த 400 ரூபாய் எண்ணை..?
அங்குதான் இவர்களுக்கு சாதகமாக செயல்படும் நம் நாட்டு உணவுக் கலப்படத் தடுப்பு சட்டங்கள் உள்ளே நுழைகின்றன..
எந்த உணவுப் பொருளிலும் அதன் கூட 20% வரை அதற்கான உணவு பதிலி சேர்த்துக் கொள்ளலாம் என்று நமது உணவு சட்டங்கள் சொல்கின்றன. Food substitute என்பதையே உணவு பதிலிகள் என்கிறேன் நான்.. அந்த உணவுப் பதிலிகளும் edible ஆக இருக்க வேண்டும். இது மட்டும்தான் கண்டிஷன்..
இப்படியாக நல்லெண்ணை ஆட்டி எடுத்தபிறகு அதனுடன் உணவுப் பதிலியாக, விலை மலிவான பருத்தி எண்ணை சேர்க்கப் படுகிறது. அரசு அனுமதித்த அளவே 20% என்றால் இவர்கள் எந்த அளவுக்கு சேர்க்கக் கூடும் என்பதை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்..
பருத்தி எண்ணையும் உண்ணத்தக்க எண்ணைதான்.. (Edible oil) அதனால் நம் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லைதானே என்று நீங்கள் கேட்கலாம். இங்கேதான் பன்னாட்டு கம்பெனிகளின் வியாபார தந்திரம் உள்ளே வருகிறது. நம் நாட்டில் மான்சான்ட்டோ உள்ளிட்ட ஜிஎம் பயிர் வகைகள் இன்னும் அனுமதிக்கப் படவில்லை என்று சொல்வது தவறு. உணவுப் பயிர்களில் மட்டும்தான் அவை அனுமதிக்கப்படவில்லை. மற்றபடிக்கு பருத்தி விவசாயத்தில் என்றைக்கோ அவர்கள் நம் நாட்டில் காலூன்றி விட்டார்கள். இன்று நம் நாட்டில் உற்பத்தியாகும் பருத்திகளில் 95% ஜிஎம் பருத்தி பயிர்களே..
இவை எந்த அடிப்படையில் அனுமதிக்கப் பட்டுள்ளன என்றால் பருத்தி என்பது உணவுப் பயிர் அல்ல. அது உடை தயாரிக்க உதவும் பயிர் ஆகவே அதில் அனுமதிக்கலாம் என்ற அடிப்படையில் அனுமதிக்கப் பட்டுள்ளன. சரி. பருத்தியை ஆடையாக உடுத்தி விடுகிறோம். ஆனால் இறுதியில் மிஞ்சும் மலட்டுப் பருத்திக் கொட்டைகளை என்ன செய்கிறோம்..? ஆட்டி எண்ணை எடுக்கிறோம். அதாவது உண்ணத் தகுந்த பருத்தி எண்ணை..
என்ன ஒரு நகை முரண் என்று பாருங்கள். உண்ணத்தக்க பொருள் அல்ல என்பதால் பருத்தியில் மரபு மாற்றுப் பயிர் இந்தியாவில் உருவாகிறது. ஆக அதிலிருந்து கிடைக்கும் பருத்தி எண்ணை உண்ணத்தக்கதல்ல என்றுதானே கொள்ளப் பட வேண்டும். ஆனால் அது மட்டும் எடிபிள் ஆயில் என்று விற்கப் படுகிறது.
இந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தியிலிருந்து கிடைக்கும் பருத்தி எண்ணைதான் தூய நல்லெண்ணை முதல் ரிஃபைன்டு ஆயில்கள் வரை food substitute என்று பெயரிடப்பட்டு கலக்கப்பட்டு வருகின்றன.
மரபணு மாற்றப் பயிர்களின் கொடுமையை எதிர்த்து உலகெங்கும் பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. தொடர்ந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவை மட்டுமே கொடுத்து வளர்க்கப் பட்ட எலிகள் அனைத்துக்கும் புற்றுநோய் வந்துவிட்டது என்பது சோதனைகளின் மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.
இப்படி நிலைமையில் மரபணு மாற்றப்பட்ட உணவு இந்தியாவில் அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டு இப்படி உணவு எண்ணைகள் அனைத்திலும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி எண்ணையை கண்ணை மூடிக் கொண்டு கலப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்..?
இதன் காரணமாகவே தற்போது இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. புற்றுநோயாளிகள் இல்லாத குடும்பங்களே இந்தியாவில் இல்லை என்னும் அளவுக்கு புற்றுநோய் நம் நாட்டின் இண்டு இடுக்கு அனைத்திலும் பரவி நிறைந்து விட்டது.
உண்மையில் புற்றுநோயை விளைவிக்கும் புகையிலைப் பொருட்களால் வருவதை விட பல மடங்கு இந்த எண்ணைகளால் புற்றுநோய் பரவி வருகிறது. புகையிலைப் பொருட்களை எதிர்த்து வீரியத்துடன் போராடிய நாம் இந்த உயிரைப் பறிக்கும் எண்ணை விளையாட்டின் அபாயம் புரியாமல் கண்ட எண்ணைகளையும் அதன் பிராண்டை நம்பி வாங்கிக் கொண்டிருக்கிறோம்..
எல்லாரும் ஆர்கானிக் எண்ணையை வாங்கி பயன்படுத்துவதுதான் ஒரே தீர்வு.. அது விலை அதிகம் என்று நீங்கள் நினைத்தால் இந்த பிராண்டட் எண்ணைகளை வாங்கி அதன் மூலம் மிச்சமாகும் பணத்துடன் இன்னும் அதிக பணம் போட்டு புற்றுநோய் வைத்தியத்துக்கு செலவழித்துக் கொள்ளுங்கள்..
வணக்கம்.
பின் குறிப்பு : இதில் உள்ள விலைகள் உங்கள் புரிதலுக்காக தோராயமாக சொல்லப் பட்டவையே.. உண்மையான விலைக்கும் இதில் நான் சொன்ன விலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கலாம். ஆர்கானிக் எண்ணைகளை விட பிராண்டட் எண்ணைகள் விலை குறைவு என்பது மட்டும்தான் உண்மையான உண்மை.. அதை மட்டும் நன்றாக புரிந்து கொண்டால் போதுமானது.
நந்தன் ஸ்ரீதரன், எழுத்தாளர். இவருடைய சமீபத்திய நூல், ஆயிரம் நீர்க் கால்கள் (கவிதைத் தொகுப்பு- அகநாழிகை பதிப்பகம்) 

No comments:

Post a Comment